


Bale! baalakumaraa!!
பலே! பாலகுமாரா!!!
Online Religious Quiz
அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணமலையில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் மற்றும் தாயார் பெயர் முத்தம்மை ஆகும். இவர் பிறந்து சில தினங்களிலேயே இவருடைய பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இவரின் மூத்த சகோதரி இவரை மிகவும் செல்லமாக வளர்த்தார். அருணகிரி கல்வியில் சிறந்து விளங்கினார். உரிய வயதில் அவருக்குத் திருமணமும் நடந்தது. ஆனாலும், அருணகிரிநாதர் அதிகமான மது, மாது, சூது, முதலிய தீய பழக்கங்களைக் கொண்டிருந்தார். இதனால் தன் சொத்துக்களை எல்லாம் இழந்தார். அவருக்குக் கொடிய நோயும் ஏற்பட்டது. தன் குடும்பதில் உள்ளவர்களும் ஊராரும் அவரை வெறுத்து ஒதுக்கினர்.
அருணகிரி நோயின் துன்பத்தால் தவித்தார். தன் நிலையைக் கண்டு வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறினார். வழியில் பெரியவர் ஒருவர் குறுக்கிட்டு முருகனைச் சென்று பணியும்படி கூறினார். கவலையில் செய்வதறியாது தவித்த அருணகிரி திருவண்ணாமலைக் கோவில் கோபுரத்தின் மீதேறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அருணகிரி கீழே குதித்தபோது முருகப் பெருமான் தன் இரு கரங்களால் அவரைத் தாங்கி தடுத்தாட்கொண்டார்.
“அருணகிரிநாதரே!”, என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்தார். அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. முருகப் பெருமான் அவரது நோயைக் குணப்படுத்தினார். "இப்பிறப்பில் மக்கள் நலனுக்காக நீர் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் அதிகம் உள்ளன. அதனால், என்னைப் பாடு", என முருகப்பெருமான் கட்டளையிட்டார். பாட சொல்லறியாமல் விழித்த அருணகிரிநாதருக்கு “முத்தைத் தரு பத்தித் திருநகை” என முருகனே பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார். அருணகிரிநாதர் மனித குல நலனுக்காக திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய முருகப் பக்தி பாமலைகள் பல பாடி அருளியுள்ளார்.
படிப்பினை: ஆன்மா நல்வினை (புண்ணியம்) தீவினைக்கு (பாவம்) ஏற்ப பல பிறவிகள் எடுக்கிறது என்பது இந்து சமயக் கோட்பாடாகும். அருணகிரிநாதர் முப்பிறப்பில் செய்த புண்ணியத்தால் இப்பிறப்பில் முருகனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.
© All rights reserved by Maamandram